ரங்கசாமி ஆஸ்பத்திரியில் இருக்கும் நிலையில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க திட்டமா?


ரங்கசாமி ஆஸ்பத்திரியில் இருக்கும் நிலையில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க திட்டமா?
x
தினத்தந்தி 12 May 2021 3:51 PM GMT (Updated: 12 May 2021 3:51 PM GMT)

முதல்-அமைச்சர் ரங்கசாமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுவை அரசியல் களமானது மற்ற மாநிலங்களை காட்டிலும் மிகவும் வித்தியாசமானது. இங்கு நிமிடத்துக்கு நிமிடம் அரசியல் நிகழ்வுகள் மாறிக்கொண்டே இருக்கும். இதற்கு காரணம் ஒரே கட்சியில் யாரும் நிரந்தரம் இல்லாமல் இருப்பதுதான்.

தங்களுக்கு எங்கு மரியாதை கிடைக்கிறதோ அந்த கட்சியில் இணைந்து போட்டியிடுவதை இங்குள்ள அரசியல்வாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்தவகையில் ஒரே கட்சியில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் இருக்கும் முக்கிய பிரமுகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கடந்த காலத்தில் அதாவது 2016 சட்டமன்ற தேர்தலில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது.

அந்த கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் பலர் தேர்தல் அறிவிக்க சில நாட்களே இருந்த நிலையில் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

இதைத்தொடர்ந்து பெரும்பான்மை இல்லாததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

அதன்பின் நடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பா.ஜ.க. 6 இடங்களில் வெற்றிபெற்றன. அ.தி.மு.க. ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

அதேநேரத்தில் எதிரணியில் தி.மு.க. 6, காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இதுதவிர 6 சுயேச்சைகளும் வெற்றிபெற்றனர்.

இதில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கூட்டணி ஆட்சியின் முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார்.

அமைச்சரவையில் துணை முதல்-அமைச்சர் மற்றும் கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியையும் உருவாக்க முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே துணை முதல்-அமைச்சர், மேலும் 2 அமைச்சர் பதவிகளை தங்களுக்கு தரவேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இலாகாக்களையும் கேட்டு என்.ஆர்.காங்கிரஸ் தலைமைக்கு பா.ஜ.க. குடைச்சல் கொடுத்து வருகிறது. ஆனால் இதற்கு ரங்கசாமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் ரங்கசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு பா.ஜ.க.வை சேர்ந்த வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மாநில அரசின் பரிந்துரையின்பேரில்தான் மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பது வழக்கம். ஆனால் கடந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து மத்திய பா.ஜ.க. அரசு வரலாறை மாற்றி எழுதியது.

தற்போது கூட்டணி கட்சியின் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியில் இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களை நியமித்து பா.ஜ.க. அதிரடி காட்டியது தான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அதிர்ச்சிக்கு காரணம்.

3 எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு இருப்பதன் மூலம் சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர ஏனாமில் ரங்கசாமியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற கோலப்பட்டு ஸ்ரீனிவாஸ் அசோக் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

இவர் தவிர மற்ற 5 சுயேச்சை எம்.எல். ஏ.க்களையும் வளைத்துப் போட பா.ஜ.க. காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையையும் தொடங்கியுள்ளது. அதற்கு பிராயச்சித்தமாக சில பலன்களை செய்து தர தயாராக இருப்பதாகவும் ஆசை வார்த்தை கூறுவதாக தெரிகிறது.

பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் அவருடன் கலந்தாலோசிக்காமல் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது அந்த கட்சியினரை அதிர வைத்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் ரங்கசாமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் எம்.எல்.ஏ.க்கள் நியமனம், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் முயற்சி என அடுத்தடுத்த நகர்வுகளை பா.ஜ.க. விரைவுபடுத்தியுள்ளது.

ஆட்சியை பிடிப்பது உள்ளிட்ட மாற்று திட்டங்களுடன் பா.ஜ.க. இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறதோ என புதுவை அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் பற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறியதாவது:-

சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பின் பா.ஜ.க.வோ, என்.ஆர். காங்கிரஸ் கட்சியோ கூட்டணி என்று கருதி அ.தி.மு.க.வை கண்டு கொள்ளவில்லை. எந்தவித பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. அ.தி.மு.க. தயவின்றி வெற்றி பெற்று விட்டதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

மாநிலம் முழுவதும் எங்களுக்கு என்று வாக்கு வங்கி உள்ளது. கடந்த கால தேர்தல் முடிவுகளை பார்த்தாலே அது தெரியும். கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

தற்போது அ.தி.மு.க.வுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களாக நியமிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி தருகிறது.

கூட்டணியில் நடக்கும் அரசியல் குறித்து எங்கள் கட்சி மேலிடத்திடம் அதிருப்தி தெரிவித்துள்ளோம். நடப்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story