சென்னையில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி விற்ற கும்பல்


சென்னையில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி விற்ற கும்பல்
x
தினத்தந்தி 13 May 2021 9:44 AM GMT (Updated: 13 May 2021 9:44 AM GMT)

சென்னையில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கார் கடத்தல்
சென்னை கோயம்பேடு மற்றும் நசரத்பேட்டை பகுதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து செல்போன் செயலி மூலம் வாடகை காரை பதிவு செய்து, பின்னர் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் அந்த கார்களை மர்மகும்பல் கடத்திச்சென்று விடுவதாக புகார்கள் வந்தன.இது குறித்து அம்பத்தூர் துணை கமிஷனர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார், கார் கடத்தும் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த மருதபாண்டி (வயது 28), கார்த்திக் (27), குலோத்துங்கன் (23), மாங்காட்டை சேர்ந்த பிரேம்குமார் (29) ஆகிய 4 பேரை 
கைது செய்து விசாரணை செய்தனர்.

மதுபானம்
இவர்கள் கூட்டாக சேர்ந்து சென்னை சென்டிரலில் இருந்து செல்போன் செயலி மூலம் வாடகை காரை பதிவு செய்வார்கள். பின்னர் காரில் பயணம் செய்யும் இவர்கள், சென்னையின் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள மதுபான கடையின் முன்பு காரை நிறுத்த சொல்வார்கள்.வாடகை கார் டிரைவரிடம் நைசாக பேசி, அவரிடம் பணத்தை கொடுத்து மதுபானம் வாங்கி வரும்படியும், அவருக்கும் மதுபானம் வாங்கி கொள்ளும்படி கூறுவார்கள். அவரும் உண்மை என நம்பி காரை நிறுத்திவிட்டு மதுக்கடைக்கு சென்றுவிடுவார்.

கவனத்தை திசை திருப்பி
பின்னர் அவர் திரும்பி வருவதற்குள் அந்த வாடகை காரை அங்கிருந்து கடத்திச்சென்று விடுவார்கள். அதன்பிறகு அந்த காரின் பதிவு எண்களை மாற்றி, அதை விற்பனை செய்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. கைதான 4 பேரிடம் இருந்து 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை, வீடுகளின் பூட்டை உடைத்து திருடினால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என்பதால் இதுபோல் நூதன முறையில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி கார்களை கடத்தி விற்றதும் தெரிந்தது.

Next Story