ரம்ஜான் பண்டிகை: மசூதிகள், பொது இடங்களில் தொழுகை நடத்த கூடாது மாநில அரசு உத்தரவு


ரம்ஜான் பண்டிகை: மசூதிகள், பொது இடங்களில் தொழுகை நடத்த கூடாது மாநில அரசு உத்தரவு
x
தினத்தந்தி 13 May 2021 7:44 PM IST (Updated: 13 May 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையையொட்டி கூட்டமாக மசூதிகள், பொது இடங்களில் தொழுகை நடத்த கூடாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பை, 

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது மக்கள் ரம்ஜானை எளிமையாக கொண்டாட வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி உள்ளது. மேலும் ரம்ஜான் கொண்டாட்டம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி பொது மக்கள் தங்கள் வீடுகளில் ரம்ஜான் தொழுகை மற்றும் இப்தாரை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல பொது மக்கள் ரம்ஜான் தொழுகை நடத்த மசூதிகள் அல்லது பொது இடங்களில் கூட்டம் சேர கூடாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பொது மக்கள் மும்பை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒதுக்கி உள்ள நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வெளியே வரவேண்டும், மற்ற நேரங்களில் வெளியே வர கூடாது எனவும் மாநில அரசு தெரிவித்து உள்ளது.

மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொது மக்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக கூடக் கூடாது, இரவு ஊரடங்கும் அமலில் உள்ளது எனவும் அரசு தெரிவித்து உள்ளது. இதேபோல நடைபாதை வியாபாரிகள் சாலையோரம் கடைகள் போட கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்கள் உரிய காரணம் இன்றி வெளியே சுற்றக்கூடாது எனவும் தெரிவித்து உள்ளது.

Next Story