94 குழந்தைகள் உள்பட 1,479 பேருக்கு கொரோனா


94 குழந்தைகள் உள்பட 1,479 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 May 2021 1:18 AM IST (Updated: 14 May 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 94 குழந்தைகள் உள்பட 1,479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 16 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 94 குழந்தைகள் உள்பட 1,479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 16 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
கொரோனா பரவல்
குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் வேக வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் பாதிப்பு கட்டுக்குள் வந்தபடி இல்லை.
தினமும் 800, 900 என்று இருந்த கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆயிரத்தை தாண்டியது. அதாவது ஒரே நாளில் 1,110 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
ஆயிரத்து 479 பேர் பாதிப்பு
இந்த நிலையில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 94 பேர் குழந்தைகள் ஆவர். இந்த பாதிப்பு எண்ணிக்கை குமரி மாவட்டத்தில் புதிய உச்சமாகும். 
கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இதுபோன்று தினமும் புதிய உச்சம் தொட்டு வருவதால் அதிகாரிகள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பின் மூலம் குமரி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 480 ஆக உயர்ந்து உள்ளது.
நாகர்கோவில் நகரம்
குமரி மாவட்டத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களில் 40 சதவீதம் பேர் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் ஆவர். நாகர்கோவில் நகரில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினம், தினம் உயர்ந்து வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
மேலும் பலர் தக்கலை அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நோய்த்தொற்று குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
16 பேர் பலி
இது ஒருபுறமிருக்க நேற்று முன்தினம் ஒரே நாளில் 16 பேரின் உயிரை கொரோனா காவு வாங்கியுள்ளது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருவதால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் பிணங்களை வைக்க இடம் இல்லை என்று கூறப்படுகிறது.

Next Story