பள்ளிக்கரணையில் பயங்கரம் பெட்ரோல் ஊற்றி கணவரை உயிருடன் எரித்துக்கொன்ற மனைவி
வீட்டுக்குள் பூட்டி பெட்ரோல் ஊற்றி கணவரை உயிருடன் மனைவியே எரித்துக்கொன்ற சம்பவம் பள்ளிக்கரணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள பள்ளிக்கரணை கைவேலி தந்தை பெரியார் நகரைச் சோ்ந்தவா் பாண்டி (வயது 42). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி (34). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சரியான வருமானம் இல்லை. அத்துடன் பாண்டிக்கு குடிப்பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அவ்வப்போது இருவரும் ஒருவரையொருவா் அடித்து தாக்கிக்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை மீண்டும் இவா்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அப்போது பாண்டி தனது மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சண்டை ஓய்ந்ததும் பாண்டி போதையில் படுத்து தூங்கி விட்டார்.
சிறிது நேரத்தில் பாண்டி உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் வீட்டுக்குள் அவரது அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பாண்டியின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பார்வதிதான் கணவரை தீ வைத்து எரித்து இருப்பார் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். ஆனால் பார்வதி, தனது கணவர் பாண்டிதான், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கொண்டதாக கூறினார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிய பாண்டியிடம், சென்னை எழும்பூா் விரைவு நீதிமன்ற நீதிபதி மரண வாக்குமூலம் வாங்கினார். அப்போது பாண்டி, தனது மனைவிதான் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு, தான் தப்பிச்செல்லாமல் இருக்க வீட்டின் கதவை வெளியே பூட்டிவிட்டார் என்று கூறினார். அதன்பிறகு பாண்டி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் பார்வதி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா். பார்வதியிடம் போலீசார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவரை உயிருடன் தீ வைத்து எரித்துக்கொன்றாரா? அல்லது பார்வதிக்கு கள்ளத்தொடா்பு உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனா். பார்வதி வீட்டில் ஏற்கனவே பெட்ரோல் வாங்கி வைத்திருந்ததுதான் போலீசாருக்கு இந்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அக்கம்பக்கத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Related Tags :
Next Story