152 சிறப்பு முகாம்கள் மூலம் சென்னையில் அடுத்த 3 நாட்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி; ககன்தீப் சிங் பேடி தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்கு அரசின் வழிகாட்டுதளின்படி, பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 14 லட்சத்து 55 ஆயிரத்து 718 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 11 லட்சத்து 42 ஆயிரத்து 447 பேருக்கும், 2-வது தவணையாக 5 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பொதுமக்களிடையே ஆரம்ப நாட்களில் காணப்பட்ட ஆர்வம் தற்போது குறைந்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த 3 நாட்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 152 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் உடனடியாக ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.வீடு வீடாக சென்று காய்ச்சல் போன்ற தொற்று அறிகுறி உள்ளதா? என களப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரிடமும் தடுப்பூசி போடப்பட்ட தகவல்கள் பெறப்படும். இந்த தகவல்களின் அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதற்கேற்றவாறு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும். மக்கள் அதிகம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும். தற்சமயம் தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story