காகித ஆலை முன்பு தொழிலாளர்கள் போராட்டம்


காகித ஆலை முன்பு தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 May 2021 6:09 PM GMT (Updated: 15 May 2021 6:09 PM GMT)

வேலாயுதம்பாளையம் அருகே கொரோனாவுக்கு தொழிலாளி பலியானார். இதையடுத்து காகித ஆலை முன்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலாயுதம்பாளையம்
தொழிலாளி பலி
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 55 வயது ஆண் ஒருவர் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புகளூர் காகித ஆலையில்  தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் காகிதபுரம் குடுடியிருப்பில் வசித்து வந்தார். 
இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த தொழிலாளிக்கு காய்ச்சல் மற்றும் சளி, இருமல் அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது  தெரியவந்தது. இதையடுத்து அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
போராட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த டி.என்.பி.எல். தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஜுவானந்தம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று மதியம் காகிதஆலை முன்பு ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காகித ஆலை நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தொழிலாளர்கள் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் 15-நாட்களுக்கு காகித ஆலையை மூட வேண்டும், கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தினரில் ஒருவருக்கு ஆலையில் தகுந்த வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து உங்களது கோரிக்கை குறித்து அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நல்ல முடிவு வராவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story