20 நாட்களில் 1,100 உடல்கள் தகனம்


20 நாட்களில் 1,100 உடல்கள் தகனம்
x
தினத்தந்தி 16 May 2021 12:26 AM IST (Updated: 16 May 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு தாவரகெரேயில் அமைக்கப்பட்ட தற்காலிக மயானத்தில் கடந்த 20 நாட்களில் கொரோனாவுக்கு பலியான 1,100 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக மர துண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு தாவரகெரேயில் அமைக்கப்பட்ட தற்காலிக மயானத்தில் கடந்த 20 நாட்களில் கொரோனாவுக்கு பலியான 1,100 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக மர துண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்காலிக மயானம்

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் தினமும் 150 முதல் 200 பேர் வரை கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். 

இதன் காரணமாக நகரில் உள்ள மின் மயானங்களில் பிணங்கள் குவிந்து வருகின்றன. கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய உறவினர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மயானங்கள் முன்பாக கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்களுடன் ஆம்புலன்ஸ்களும் வரிசை கட்டி நிற்பதை தினமும் காணமுடிகிறது. நகரில் உள்ள மின்மயானங்களில் உடல்களை தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பெங்களூரு அருகே தாவரகெரேயில் தற்காலிக மயானம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மரக்கட்டைகள் மூலமாக உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகிறது.

1,100 உடல்கள் தகனம்

அந்த மயானத்தில் தினமும் அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணிவரை உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 20 நாட்களில் இந்த தற்காலிக மயானத்தில் மட்டும் கொரோனாவுக்கு பலியான 1,100 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 

இதன் மூலம் பெங்களூருவில் கொரோனாவால் ஏற்படும் உயிர் பலி எந்த அளவுக்கு உள்ளது என்பது தெளிவாகி இருக்கிறது.
அதே நேரத்தில் கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய உறவினர்கள் வருவதற்கு தயங்குவதாகவும், தாங்களே முன்னின்று இறுதி சடங்கு நடத்தி தகனம் செய்து வருவதாகவும் அங்குள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் தாவரகெரேயில் உள்ள தற்காலிக மயானத்தில் எப்போதும் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்பதுடன், பலியானவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க நிற்பதை தினமும் பார்க்க முடிகிறது.

தட்டுப்பாடு இல்லை

இதற்கிடையில், தாவரகெரேயில் உள்ள மயானத்தில் உடல்களை எரிக்க தேவைப்படும் மரக்கட்டைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு உடலை தகனம் செய்ய 400 முதல் 500 கிலோ மரக்கட்டைகள் தேவைப்படுகிறது. இந்த மயானத்திற்கு தினமும் 70 முதல் 80 டன் மரத்துண்டுகளை வனத்துறை வழங்கி வருகிறது.

தாவரகெரே மயானத்தில் இதுவரை மரத்துண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும், தட்டுப்பாடு ஏற்படாமல் மரத்துண்டுகளை வழங்கும்படி வனத்துறைக்கு மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story