பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
அரியலூர் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
அரியலூர்:
கூட்டம் அலைமோதல்
கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து அரியலூர் நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் டீக்கடைகள், சாலையோர காய்கறி, பழக்கடைகள் மற்றும் பூக்கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டன. இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். இதனால் நேற்று காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை அரியலூர் நகரில் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் நெருக்கமாக நின்று பொருட்களை வாங்கிச்சென்றனர். இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. போலீசார் நகரை சுற்றி உள்ள கலெக்டர் அலுவலக சாலை, கல்லங்குறிச்சி, செந்துறை, பெரம்பலூர், திருச்சி சாலைகளில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நகருக்குள் வராமல் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும் சிறுசிறு சந்துகள் வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.
சிகிச்சைக்காக தவிப்பு
பகல் நேரத்தில் சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன. நகரில் நோய்த்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இடமில்லாமல் மக்கள் சிகிச்சைக்காக தவித்து வருகின்றனர். இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அரியலூர் பஞ்சு பட்டறை தெருவில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதால் அப்பகுதி தகரம் வைத்து அடைக்கபட்டது.
மக்கள் அதிகமாக கூடும் காந்தி மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள காய்கறி கடைகள், மீன், கோழி, இறைச்சி கடைகளை சென்ற ஆண்டு மாவட்ட நிர்வாகம் அரசு மேல்நிலைப் பள்ளி, காமராஜர் திடல், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு இடம் மாற்றியது. ஆனால் இந்த முறை அது போன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
ஒத்துழைக்க வேண்டும்
அரியலூர் நகரை சுற்றி உள்ள கிராம மக்கள் ஊரடங்கை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. அனைத்து ஊர்களிலும் அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அரியலூர் நகரில் வந்து பொருட்கள் வாங்கிச்செல்வது அதிகமாகி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் நோய் பரவலை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் நகரில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 11 மணிக்கு மேலும் காய்கறி, இறைச்சிக்கடைகள், பழக்கடைகள் பாதி மூடிய நிலையில் விற்பனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று உடனடியாக பொதுமக்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். ஆனால் அதனை மீறிய பொதுமக்களுக்கு மேலும் சிறிது நேரம் கால அவகாசம் அளித்தனர்.
பின்னர் போலீசார் ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் தடுப்புகளை அமைத்து 4 சாலைகளிலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்த நபர்களிடம் எதற்காக வெளியே வந்தார்கள் என்பது குறித்து விசாரித்தனர். முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் உள்ளிட்டோருக்கும், அத்தியாவசிய தேவை இன்றி வந்த ஏராளமான நபர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். இதைத்தொடர்ந்து டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு, பொதுமக்களை ஒலிபெருக்கியில் எச்சரித்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story