பாலங்கள், தெருக்களை தடுப்புகளால் அடைத்த போலீசார்
மதுரை நகரில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பொதுமக்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பாலங்கள், தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டது
மதுரை
மதுரை நகரில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பொதுமக்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பாலங்கள், தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
முழு ஊரடங்கு
தமிழக அளவில் மதுரை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், மதுரை பெத்தானியாபுரம் மற்றும் கோச்சடை பகுதிகளில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் நாளொன்றுக்கு பதிவாகும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து 253 என்ற அளவில் உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக குறையவில்லை. சிலர் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை கவனத்தில் கொண்டு இந்த பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மாநகராட்சி மற்றும் போலீசார் இணைந்து இந்த இரண்டு பகுதிகளின் முக்கிய தெருக்கள் அனைத்திலும் சவுக்கு கம்பு மற்றும் பேரிகார்டு கொண்டு தடுத்து அடைத்தனர். இதன் மூலம் இந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
மருந்து தெளிப்பு
மேலும், இந்த பகுதியில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து தெருக்களிலும் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன. வீடுகளில் இருந்து பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பகுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க காரணம், இங்கு ஊரடங்கை மீறி தெருக்களில் தேவையில்லாமல் ஆட்கள் நடமாடுவதும், எச்சில் துப்புவதும், கும்பலாக தெருக்களில் உட்கார்ந்து அரட்டையில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.
மதுரையின் பிற பகுதிகளை பொருத்தமட்டில் நேற்றைய புள்ளிவிபரப்படி கோச்சடையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 255, பெத்தானியாபுரம் 253, கண்ணனேந்தல் 253, திருப்பாவை 251, ஆனையூர் 211, பொன்மேனி 196, சின்ன அனுப்பானடி 175, விசாலாட்சிபுரம் 173, எஸ்.எஸ். காலனி 169, பழங்காநத்தம் 169, மேலமடை 162, பீ.பீ. குளம் 157, ஆலங்குளம் 153, சாந்தி நகர் 149, கே.கே. நகர் 142, டி.வி.எஸ். நகர் 136, அவனியாபுரம் 132, திருநகர் 132, புதூர் 127, தெப்பக்குளம் 122 என்ற அளவில் உள்ளது.
நடவடிக்கை
எனவே, கொரோனா பரவலை தடுக்க பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில் ஆட்கள் தேவையின்றி வெளிவருவதை தடுக்க போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, தடையை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மதுரையில் உள்ள பல்வேறு மேம்பாலங்களில் போக்குவரத்திற்கு தடை செய்து போலீசாரால் தடுப்பு அமைத்து மூடினர்.
Related Tags :
Next Story