சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை மகன் இறந்த மன உளைச்சலில் விபரீதம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற தி.மு.க. நிர்வாகி மகன் இறந்த மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற தி.மு.க. நிர்வாகி மகன் இறந்த மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தி.மு.க. நிர்வாகி
சேலம் அரிசிபாளையம் முத்தியாள் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). மாநகர தி.மு.க. நெசவாளர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த 11-ந் தேதி உடல் நிலை சரியில்லாததால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுப்பிரமணிக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் தனது குடும்பத்தினரிடம் ஆஸ்பத்திரியில் உள்ள குளியல் அறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த அறை கதவை திறந்து பார்த்தபோது அங்கு சுப்பிரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மகன் இறந்ததால் மனஉளைச்சல்
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுப்பிரமணியின் மகன் முருகேசன் என்பவர் சமீபத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதிலிருந்து சுப்பிரமணி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. நிர்வாகி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story