நெல்லை, தென்காசியில் விடிய விடிய மழை; குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு
நெல்லை, தென்காசியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி டவ்தே புயலாக மாறி உள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவில் விடிய, விடிய கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை கொட்டியது.
பலத்த மழை காரணமாக, நேற்று முன்தினம் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது. தொடர்ந்து இரவிலும் பெய்த கனமழை காரணமாக, நேற்று காலையில் இருந்தே அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து காலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் பிற்பகலிலும், மாலையிலும் பலத்த மழை விட்டு விட்டு பெய்தது.
இதனால் மாலையில் குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள பாதுகாப்பு வளைவை (ஆர்ச்) தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மலைப்பகுதியில் இருந்த மண், கற்கள் போன்றவையும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதால், தண்ணீர் சற்று பழுப்பு நிறத்தில் காட்சி அளித்தது. இதேபோல அங்குள்ள ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியில் உள்ள ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் நன்றாக இருக்கும். அப்போது இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழவும், குளுமையான சீசனை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் வருவார்கள். சில வருடங்களில் மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியுள்ளது.
தற்போதைய சூழலில் இப்போது பெய்து வரும் மழை நீடித்தால் சீசன் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, குற்றாலம் அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இதையொட்டி அருவிகளுக்கு செல்லும் வழியில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள களக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
களக்காடு- தலையணை சாலையில் ஐந்துகிராமம் பகுதியில் நாங்குநேரியான் கால்வாயின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஐந்துகிராமத்தில் இருந்து தலையணை, சிவபுரம், கள்ளியாறு, வனத்துறை அலுவலகங்கள், வன அலுவலர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தனித்தீவாக காட்சி அளித்தது. அங்குள்ள விளைநிலங்களுக்கும் விவசாயிகள் செல்ல முடியவில்லை.
இதையடுத்து வெள்ளத்தில் சேதமான தற்காலிக தரைப்பாலத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் சுஷ்மா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு போக்குவரத்து தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, களக்காடு சிவபுரம், கள்ளியாறு, அரசப்பத்து உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த ஏராளமான வாழை மரங்கள் சரிந்து சேதமடைந்தன.
இதேபோன்று வள்ளியூர், பணகுடி, காவல்கிணறு, ரோஸ்மியாபுரம், சிவகாமிபுரம், தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்களும், பப்பாளி மரங்களும் சரிந்தன. குலை தள்ளிய நிலையில் பெரும்பாலான வாழைகள் சரிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். எனவே, பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் -44, சேர்வலாறு -23, மணிமுத்தாறு -6, நம்பியாறு -10, கொடுமுடியாறு -55, அம்பை -5, சேரன்மாதேவி -15, ராதாபுரம் -11, நாங்குநேரி -20, களக்காடு -26, மூலக்கரைப்பட்டி -16, பாளையங்கோட்டை -10, நெல்லை 8.
கடனா -5, ராமநதி -5, கருப்பாநதி -20, குண்டாறு -15, அடவிநயினார் -45, செங்கோட்டை -9, தென்காசி -15, ஆய்குடி -5, சிவகிரி -8.
Related Tags :
Next Story