பள்ளிக்கூட காவலாளி கொடூரக்கொலை; டிராக்டரால் மோதி அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது


பள்ளிக்கூட காவலாளி கொடூரக்கொலை; டிராக்டரால் மோதி அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 15 May 2021 10:00 PM GMT (Updated: 15 May 2021 10:00 PM GMT)

சங்கரன்கோவில் அருகே பள்ளிக்கூட காவலாளி டிராக்டரால் மோதியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவருக்கு திருமணமாகி, 2 மகன்கள் உள்ளனர். இவர் தற்காலிகமாக சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் காவலாளியாக பணிக்கு சேர்ந்தார். 

இவருக்கும், அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான பாலமுருகேசன் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக சங்கரன்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் கணேசன் அந்த பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு டிராக்டரில் வந்த பாலமுருகேசன், கணேசன் ஓட்டி வந்த மொபட் மீது டிராக்டரால் மோதினார்.
இதில் கீழே விழுந்த கணேசனை பாலமுருகேசன் கம்பால் தாக்கியதாகவும், அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் பாலமுருகேசன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கணேசனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக்கொலை சம்பவம் குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற பாலமுருகேசனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

டிராக்டரால் மோதியும், அரிவாளால் வெட்டியும் பள்ளிக்கூட காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story