வேப்பேரி, தாம்பரத்தைச் சேர்ந்தவர்கள்: கொரோனா பாதிப்பால் மேலும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பலி
கொரோனா வைரஸ் காரணமாக வேப்பேரி மற்றும் தாம்பரம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை,
சென்னையில் கொரோனா தொற்றால் போலீசார் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகர போலீஸ் துறையில் உதவி கமிஷனர் உள்பட 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் கொரோனாவுக்கு மேலும் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலியாகி உள்ளனர். சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் இளங்கோவன் (வயது 55). இவர் கடந்த ஏப்ரல் 17-ந்தேதி ‘கோவேக்சின்’ தடுப்பூசி செலுத்திக்கொண்டார். எனினும் அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 28-ந்தேதி முதல் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.
இளங்கோவனுக்கு பாரதி (40) என்ற மனைவியும், மது (22), சுவீட்டி (19) ஆகிய 2 மகள்களும், சர்வேஷ் (4) என்ற மகனும் உள்ளனர். சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 11 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் சென்னையை அடுத்த தாம்பரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஜான்ரூபஸ் (57). இவர், தாம்பரம் பாரதிதாசன் தெருவில் வசித்து வந்தார். இவருடைய சொந்த ஊர் கன்னியாகுமரி ஆகும்.
இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதியானதால் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ரூபஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன்மூலம் சென்னை மாநகர போலீஸ் துறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. இது சக போலீஸ்காரர்கள் இடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story