தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 40 ஆயிரம் பேர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 40 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை முககவசம் அணியாத 40 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
வாகன தணிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இருந்தது. இதனால் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 65 இடங்களில் வாகன தணிக்கைகள் நடந்தன. அதன்படி தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் தூத்துக்குடி நகர துணைபோலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் வாகன தணிக்கை நடந்தது. அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். அந்த பகுதியில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் வந்தவர்களுக்கு அறிவுரைகள் கூறி கபசுர குடிநீர் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கட்டுப்பாடுகள்
தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் எந்த கடைகளும் திறக்க அனுமதிக்கப்படவில்லை. பால் மற்றும் மருத்துவ சேவைக்ள போன்ற அத்தியாவசிய தேவைகள் மட்டும் வழக்கம் செயல்பட்டன. புதிய கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்து உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பலசரக்கு, காய்கறி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் முழு ஊரங்கை கடைபிடிக்க வேண்டும். தேவை இல்லாமல் வெளியில் வர வேண்டாம். தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஆஸ்பத்திரி, மெடிக்கல், மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணி மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் பணத்தை வாங்க செல்பவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள்
தூத்துக்குடி நகரில் 20 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மீது 600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை கிருமிநாசினி மற்றம் சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, கார்த்திகேயன், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story