அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: கூடுதலாக 720 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராகிறது


அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: கூடுதலாக 720 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராகிறது
x
தினத்தந்தி 16 May 2021 10:23 PM IST (Updated: 16 May 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கூடுதலாக 720 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராகிறது. ஓரிரு நாளில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான கொரோனா நோயாளிகள் வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அதிகஅளவில் தேவைப்படுகிறது. இதனால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 250 படுக்கைகளும், தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் 250 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இந்தநிலையில் கடலூர், காரைக்கால், செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து அதிகஅளவில் கொரோனா நோயாளிகள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவதால் அவர்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஒதுக்க முடியவில்லை. ஏற்கனவே சிகிச்சையில் இருக்கக்கூடியவர்கள் யாராவது குணம் அடைந்து வீடு திரும்பினாலோ அல்லது சிகிச்சை பலனின்றி இறந்தாலோ காலியாக கூடிய படுக்கைகள் தான் ஏற்கனவே சிகிச்சைக்காக காத்திருக்கக்கூடிய நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

தயாராகும் 720 படுக்கைகள்

இதனால் மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகளும், தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் 320 படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையமானது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயாராகி வருகிறது. இந்த சிகிச்சை மையத்திற்கும், பிரசவ வார்டுக்கும் இடையே தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 400 படுக்கைகள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த 720 படுக்கைகளும் ஓரிரு நாளில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பிவிட்டன. வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருவதால் அவர்களுக்கு படுக்கைகள் ஒதுக்கி கொடுக்க கொஞ்சம் தாமதம் ஏற்படுகிறது. யாரையும் திருப்பி அனுப்பவில்லை. ஆக்சிஜன் அளவானது தற்போது சிகிச்சையில் இருப்பவர்களுக்கு வழங்க சரியாக இருக்கிறது. கூடுதலாக 720 படுக்கைகள் தயாராகி வருகிறது. நிலைமை மிக மோசமாகி வருவதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். கொரோனாவால் இறந்தவர்களின் உடலை வைப்பதற்காக பயன்படும் பிளாஸ்டிக் உறைகள் இனிமேல் தட்டுப்பாடு இருக்காது. தற்போது 2 ஆயிரம் பிளாஸ்டிக் உறைகள் வாங்கப்பட்டுள்ளன என்றனர்.

இந்த 720 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்து கொடுக்கப்பட்டவுடன் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story