காரைக்காலில் இருந்து சரக்கு ரெயிலில் 1318 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது


காரைக்காலில் இருந்து சரக்கு ரெயிலில் 1318 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது
x
தினத்தந்தி 16 May 2021 10:27 PM IST (Updated: 16 May 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் இருந்து சரக்கு ரெயிலில் தஞ்சைக்கு 1,318 டன் யூரியா உரம் வந்தது தஞ்சையிலிருந்து இந்த உரம் டெல்டா மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். தற்போது டெல்டா மாவட்டங்களில் கோடை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. முன்பட்ட குறுவை எனப்படும் இந்த கோடை நெல் சாகுபடி பம்புசெட் மோட்டார் உள்ள பகுதிகளில் மட்டும் நடைபெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 16 ஆயிரம் ஏக்கர் வரை கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

1318 டன் யூரியா உரம்

இந்த நிலையில் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான 1318 டன் யூரியா உரம் காரைக்காலில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நேற்று தஞ்சைக்கு வந்தது. 21 வேகன்களில் வந்த இந்த உரங்கள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையம் மற்றும் சேமிப்புக்கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story