வெளுத்து வாங்கும் கனமழையால் குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
குமரியில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். பல கிராமங்கள் இருளில் மூழ்கின.
குழித்துறை:
குமரியில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். பல கிராமங்கள் இருளில் மூழ்கின.
கனமழை
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் சின்னத்தால் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடை, இடையே அடைமழையும் பெய்து வெளுத்து வாங்குகிறது. அதோடு மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால், மின்தடை ஏற்பட்டு பல கிராமங்கள் இருளில் மூழ்கின.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
வெள்ளப்பெருக்கு
மார்த்தாண்டம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. நேற்று காலையிலும் மழை நீடித்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி தொடர்ந்து வெள்ளம் பாய்கிறது. எனவே, சப்பாத்து பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதித்து கம்பியால் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் ெவட்டுமணியில் இருந்து குழித்துறைக்கு செல்லும் சாலையில் புகுந்தது. மேலும் கரையோர பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்கள் மற்றும் ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசமாகி உள்ளன.
வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை-திக்குறிச்சி சாலையில் மழை வெள்ளம் தேங்கியதால், வள்ளக்கடவு பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க மணல் மூடைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தினர். ஆனாலும் சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கனமழையால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியே தெரியாத அளவு வெள்ளம் கொட்டுகிறது. இந்த வெள்ளம் அருவியின் அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்தையும், கல் மண்டபத்தையும் மூழ்கடித்த நிலையில் சென்றது. இதேபோல் மாவட்டத்தில் பழையாறு உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் பல வீடுகளும் சேதமடைந்தன.
புதுக்கடை
புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியில் இருந்து தொலையாவட்டம் மாதாபுரம் பகுதிக்கு ஒரு இணைப்பு சாலை செல்கிறது. தற்போது பெய்துவரும் கனமழையால் இந்த சாலையில் பல அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி மழை நீர் தேங்குவதால், இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story