கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு


கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
x
தினத்தந்தி 16 May 2021 5:59 PM GMT (Updated: 16 May 2021 5:59 PM GMT)

குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
கனமழை
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் வீடு இடிந்து விழுந்து குழந்தை உள்பட 2 பேர் இறந்தனர். அவர்களின் குடும்பத்தினரை தமிழக மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறி, தலா ரூ.4 லட்சத்துக்கான நிவாரண உதவியை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அவர் கனமழையால் பாதிக்கப்பட்ட தேங்காப்பட்டணம் துறைமுகம், இரையுமன்துறை மஞ்சாலுமூடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் அரவிந்த், விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம்     கூறியதாவது :-
முதல்-அமைச்சர்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடலரிப்பு ஏற்பட்டு, விளைநிலங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்கவும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை இன்று (அதாவது நேற்று) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட ராமன்துறை பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த குழந்தை ரெஜினா (2) மற்றும் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட மஞ்சாலுமூடு காரோடு பகுதியை சேர்ந்த யூஜின் (36) மரணமடைந்ததையும் கேள்விப்பட்ட தமிழக முதல்-அமைச்சர், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவி தொகை வழங்குமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.8 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
நிவாரணப்பணி
மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்திடவும், பாதிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக சரிசெய்து கொடுத்திட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனமழை மற்றும் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களான மிடலாம், மேல்மிடாலம், முள்ளூர்துறை, தேங்காப்பட்டணம் துறைமுகம், பூத்துறை, இரையுமன்துறை, தூத்தூர் இடப்பாடு, சின்னத்துறை ஆகிய கிராமங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, இப்பகுதிகளில் உடனடி நிவாரணப்பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
தமிழகஅரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் புயல் எச்சரிக்கையினை தாண்டியும், கடலில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பாத அனைத்து மீனவர்களையும் காக்கின்ற வகையில் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல்படையின் மூலமாக உடனடியாக அவர்களுக்கு தகவல் தெரிவித்து, கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
ஒருசில படகுகள் கோவா அருகில் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அவர்களை பத்திரமாக மீட்பதற்கு கடலோர படகுகளை அனுப்பி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணியும் விரைவாக முழுவீச்சில் நடைபெற்று வருவதோடு, மீனவர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் அவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிரந்தர தீர்வு
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்கரை கிராமமான தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் படகுகள் செல்லமுடியாத அளவிற்கு முகத்துவாரங்கள் மண்ணால் சூழப்பட்டு உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்று இப்பகுதி மீனவர்கள், மீனவ அமைப்புகள் மற்றும் அருட்தந்தையர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 இக்கோரிக்கையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இரையுமன் துறையில் கடலரிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. அதனை நிரந்தரமாக தடுக்கின்ற வகையில் தூண்டில் வளைவுகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் அமைக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கனிமொழியால்தான் இப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று, துரித நடவடிக்கை மேற்கொண்டு, விரைவில் நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு கடலோர மீனவ மக்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story