ஈரோடு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 94 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்- சுகாதாரத்துறையினர் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 94 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்- சுகாதாரத்துறையினர் தகவல்
x
தினத்தந்தி 16 May 2021 10:39 PM GMT (Updated: 16 May 2021 10:39 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 94 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 94 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 70 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 6 லட்சத்து 61 ஆயிரம் பேர், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 
தற்போது வரை, 45 வயதுக்கு மேற்பட்டோரில், 94 ஆயிரம் பேர் என, 14 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.
அதேநேரம் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதித்த 6 ஆயிரத்து 797 பேரில் 3 ஆயிரத்து  585  பேருக்கு கொரோனா  தொற்று நேரடியாக ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூலம் 2 ஆயிரத்து 939 பேருக்கும், பிற மாநிலம் மற்றும் பிற மாவட்டத்தினர் 65 பேருக்கும், பிற மாவட்டம் சென்று வந்ததால் 198 பேருக்கும், முன் களப்பணியாளர்கள் 10 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு
கொரோனா பாதித்த ஒருவர் மூலம் 26 பேருக்கு சராசரியாக பரவும் வாய்ப்பு உள்ளது. 
தற்போதைய தொற்றில் கிராம பஞ்சாயத்துக்களிலும், அடுத்தபடியாக மாநகராட்சி பகுதியிலும், அடுத்து பேரூராட்சியிலும்  அதிகமாக பரவி உள்ளது. நகராட்சி பகுதியில் சற்று குறைவாகவே காணப்படுகிறது.
தொற்று பாதித்தவர்களில் ஈரோடு மாநகரில் 31 சதவீதமும், பவானி, பெருந்துறை, கோபி, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 7 முதல் 9 சதவீதம் பேரும் உள்ளனர். 
அந்தியூர், சத்தியமங்கலம், சென்னிமலை பகுதியில் 5 முதல் 6 சதவீதமும், ஈரோடு, கொடுமுடி, தாளவாடி பகுதிகளில் 4 சதவீதம் பேரும் பாதித்துள்ளனர்.
முகாம்
பவானிசாகர், அம்மாபேட்டை, நம்பியூர், டி.என்.பாளையம் பகுதியில் மிகக்குறைந்த அளவாக ஒன்று முதல் 2 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா பாதித்தோர் உள்ளனர்.
இதன் அடிப்படையில் மாநகர் பகுதிக்கு இணையாக கிராமப்பகுதி, பேரூராட்சி பகுதியில் அதிக முகாம்கள் நடத்தி, கொரோனா பரிசோதனையை அதிகரித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு   சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story