கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடலுக்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சை; சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு


கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடலுக்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சை; சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 May 2021 11:46 AM GMT (Updated: 17 May 2021 11:46 AM GMT)

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடலுக்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா 2-வது அலை

புதுவையில் கொரோனா தொற்று 2-வது தீவிரமாகி பரவி வருகிறது. இதனால் நாளொன்றுக்கு 2 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. அதேபோல் தினமும் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறக்கின்றனர். சவக்கிடங்கும் நிரம்பி வழிவதால் இறந்தவர்களின் உடல்களை வைக்க முடியாத நிலை உள்ளது.

கதிர்காமம் அரசு மருத்துவமனை

புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆக்சிஜன், வெண்டிலேட்டர் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதுவையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியாக கதிர்காமம் மருத்துவமனையில் கூடுதலாக படுக்கை வசதிகளை செய்ய சுகாதாரத்துறை முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

சுயேச்சை எம்.எல்.ஏ. ஆய்வு

இந்தநிலையில் கதிர்காமம் மருத்துவமனையில் உருளையன்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு என்கிற குப்புசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடல் அங்குள்ள படுக்கையில் கவரில் பொட்டலமாக போட்டு வைக்கப்பட்டிருந்தது. இறந்தவரின் உடலுக்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததை கண்டு அதிர்ந்து போனார்.

கதிர்காமம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சந்திக்கும் இன்னல்களை நேரு எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story