காஞ்சீபுரம் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் 120 படுக்கைகளுடன் கொரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

காஞ்சீபுரம் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
காஞ்சீபுரம்,
தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி, காஞ்சீபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர்கள் காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் ரூ.18 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 250 படுக்கைகள் கொண்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல கட்டிடத்தில் ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் வசதிகொண்ட 100 படுக்கைகளை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு, 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டனர்.
இறுதியாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
கொரோனா நோய்த்தொற்றை முற்றிலுமாக அழிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியமாகும். தமிழகத்தில் 77 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தினமும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முதல்-அமைச்சர் 1.5 கோடி தடுப்பூசியை மத்திய அரசின் மூலமும் மீதமுள்ள 3.5 கோடி தடுப்பூசி உலகளாவிய டெண்டர் மூலம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் உத்திரமேரூர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






