காஞ்சீபுரத்தில் 3 நாள் சோதனையில் 409 வாகனங்கள் பறிமுதல்


காஞ்சீபுரத்தில் 3 நாள் சோதனையில் 409 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 May 2021 5:30 AM GMT (Updated: 19 May 2021 5:30 AM GMT)

காஞ்சீபுரத்தில் 3 நாள் சோதனையில் 409 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சீபுரம்,

கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் ஒன்றான காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக 500 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கியுள்ள நிலையில் 10 மணியை கடந்து சாலைகளில் தேவையில்லாமல் சுற்றிதிரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அத்தியாவசிய தேவைக்கு 10 மணியை கடந்து யாரும் வெளியே வர வேண்டாம், மருத்துவம் தொடர்பான தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார்.

கடந்த 3 நாட்களில் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்த 409 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சமூக இடைவெளி முககவசம் அணியாத நபர்கள் மீது 398 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story