மேலும் 5 பேர் பலி


மேலும் 5 பேர் பலி
x
தினத்தந்தி 19 May 2021 4:24 PM GMT (Updated: 19 May 2021 4:24 PM GMT)

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.
தொற்று பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 498 பேர். நேற்று மட்டும் மாவட்டத்தில் 193 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிகிச்சை முடிந்து 9 ஆயிரத்து 956 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் 2 ஆயிரத்து 761 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 600 ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளதில் தற்போது 155 பேர் அதில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளதில் தற்போது 70 பேர் அதில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல கோவிட் கேர் மையங்களில் உள்ள 994 படுக்கைகளில் 163 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர, வீடுகளில் ஆயிரத்து 837 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் மொத்தம் உள்ள 344 படுக்கைககளில் தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
5 பேர் பலி
தனியார் ஆஸ்பத்திரிகளில் 264 படுக்கைகள் காலியாக உள்ளன. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 870 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 3 கொரோனா நோயாளிகள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி ஆயிரத்து 780, கோவிஷீல்டு 6 ஆயிரத்து 90 எண்ணிக்கையிலும் இருப்பு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கிராம பகுதிகளில் 3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கும், நகர் பகுதிகளில் 71 ஆயிரத்து 298 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 5ஆயிரத்து 447 பேருக்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 493 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 13 ஆயிரத்து 696 பேருக்கு பரிசோதனை செய்ததில் 116 பேருக்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அபராதம்
பொது ஊரடங்கு உத்தரவினை மீறி முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் சென்றதாக ரூ.1 கோடியே 20 லட்சத்து 58 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story