திருவிக தேர்நிலை காய்கறி மார்க்கெட்டுகள் பழைய பஸ் நிலையத்துக்கு இடமாற்றம்


திருவிக தேர்நிலை காய்கறி மார்க்கெட்டுகள் பழைய பஸ் நிலையத்துக்கு இடமாற்றம்
x
தினத்தந்தி 19 May 2021 5:08 PM GMT (Updated: 19 May 2021 5:08 PM GMT)

திரு.வி.க., தேர்நிலை காய்கறி மார்க்கெட்டுகள் பழைய பஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

திரு.வி.க., தேர்நிலை காய்கறி மார்க்கெட்டுகள் பழைய பஸ் நிலையத்துக்கு  தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

காய்கறி மார்க்கெட்டுகள் 

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 

பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள திரு.வி.க. மார்க்கெட், உடுமலை ரோட்டில் உள்ள தேர்நிலை திடல் காய்கறி மார்க்கெட்டுகள் குறுகலான இடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக காய்கறிகள் வாங்குவதற்கு வரும் பொதுமக்களால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. 

இடமாற்றம் 

இதை கட்டுப்படுத்த திரு.வி.க., தேர்நிலை திடல் ஆகிய காய்கறி மார்க்கெட்டுகள் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்துக்கு வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. 

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் வாங்குவதற்கு ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டங்கள் வரையப்பட்டு உள்ளன. மேலும் பஸ் நிலையம் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பாதுகாப்பு வழிமுறைகள்

பொள்ளாச்சி நகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் எளிதில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இரு மார்க்கெட்டுகளும் தற்காலிகமாக பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. 

வியாபாரிகளும், பொதுமக்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறிகளை வாங்கி செல்ல வேண்டும். 

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். பஸ் நிலையத்தில் மார்க்கெட்டுகள் செயல்படுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story