வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 18 பேர் பலி


வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 18 பேர் பலி
x
தினத்தந்தி 19 May 2021 5:39 PM GMT (Updated: 19 May 2021 5:39 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. 
தொற்றை தடுக்க 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் வழக்கம்போல் வெளியில் சுற்றித்திரிகிறார்கள். 
அதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.

நேற்றைய பரிசோதனையில் 750 பேருக்கு பாதிப்பு உறுதியானது. மாநகராட்சி பகுதியில் மட்டும் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காட்பாடி தாலுகாவில் நேற்று மட்டும் 131 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், மாநகராட்சி பகுதியில் 99 பேரும், கிராம பகுதியில் 31 பேரும், பேரூராட்சி பகுதியில் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

கே.வி.குப்பம் பகுதிகளில் 28 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அடுக்கம்பாறை, குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தொற்று பாதித்த முதியவர்கள் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.

18 பேர் பலி

அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 14 பேர் நேற்று முன்தினம் இறந்து விட்டனர். 

இந்த நிலையில் நேற்று அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 14 பேரும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 4 பேரும் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் 18 பேரின் உடல்களும் முழுபாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story