வெளியே வராதீங்க! மருத்துவமனைகள் நிரம்பி விட்டன கொரோனா சங்கிலி உடைய ஒத்துழைப்பு அவசியம்


வெளியே வராதீங்க! மருத்துவமனைகள் நிரம்பி விட்டன கொரோனா சங்கிலி உடைய ஒத்துழைப்பு அவசியம்
x
தினத்தந்தி 19 May 2021 5:44 PM GMT (Updated: 2021-05-19T23:14:19+05:30)

வெளியே வராதீங்க! மருத்துவமனைகள் நிரம்பி விட்டது. கொரோனா சங்கிலி உடைய அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் தேவையாகும்.

கடலூா்

கொரோனா என்ற கொடிய அரக்கனின் கோரப்பிடிக்குள் உலகமே சிக்கி போரிட்டு கொண்டு இருக்கிறது.
இதில் தமிழகம் மட்டும் விதிவிலக்கு அல்ல. தினசரி இதன் கோரப்பிடிக்குள் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது. மேலும் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் ஏறுமுகத்தியே உள்ளது. இதனால் மருத்துவமனைகளும் நிரம்பி வழிந்து வருகிறது. 

3800 படுக்கைகள்

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு மொத்தம் 3800 படுக்கைகள் உள்ளது. 
இதில் ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகளின் எண்ணிக்கை 585 ஆகும். அரசு மருத்துவமனையில் மட்டும் 520 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இது தவிர மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள 15 தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 500 படுக்கைகள் இருக்கிறது. 

 தற்போது கடலூர் மாவட்டத்தில் தினசரி அதிகரிக்கும் தொற்று காரணமாக தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் பெரும்பாலானவை நிரம்பிவிட்டன. 

கடினமான சூழல்

அந்த வகையில் எடுத்துக்கொண்டால் மொத்தம் உள்ள 585 ஆக்சிஜன் படுக்கைகளில் 700 பேருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு கடினமான சூழலில் தான் இன்றைய நிலை இருக்கிறது. 

அதோடு மொத்தம் உள்ள 3800 சாதாரண படுக்கையில் கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 3 படுக்கைகளும், மற்றொரு மருத்துவமனையில் 1 படுக்கையும் தான் காலியாக இருக்கிறது. 

இதுதவிர பண்ருட்டி, திட்டக்குடி, வேப்பூர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப் பாடி ஆகிய பகுதிகளில் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையங்களில் சாதாரண படுக்கையில் 191 படுக்கைகள் உள்ளன. 

இவ்வாறு  மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி விட்ட சூழலில் கடலூர் மாவட்டம் ஒரு சவாலான காலக்கட்டத்தில் தற்போது இருக்கிறது. இனி வரும் ஒவ்வொரு நாட்களும் கடினமான ஒன்றுதான்.

 மாவட்டத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்பு தற்போதைய சூழ்நிலையை எதிர்கொண்டு கொரோனாவுக்கு எதிராக போர் புரிந்து கொண்டுள்ளது.

காரணமின்றி சுற்றுகிறார்கள்

 இதுபோன்ற நிலையில் மேற்கொண்டு தினசரி பாதிப்பு அதிகரித்தால், விபரீதத்தை தான் சந்திக்க வேண்டியது இருக்கும்.  எனவே பொதுமக்கள் அனைவரும் சுயகட்டுப்பாடுடன் செயல்பட்டால் மட்டுமே உயிர்காக்க முடியும். 

ஆனால்,  நிலைமை அவ்வாறாக இல்லை, ஊரடங்கு போடப்பட்ட நாட்களில் இருந்து, மக்கள் வெளியே வருவதை தவிர்க்காமல் அதிகளவு வந்து செல்கின்றனர்.  

பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் கேட்டால், கடைகளுக்கு செல்வதாக கூறிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இன்றும் பலர் இருந்து வருகிறார்கள். கண்முன்னே இருக்கும் ஆபத்தை யாரும் உணராமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.

மாவட்டத்தில் பிறபகுதிகளிலும் இதே நிலை தான். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, சாலைகளில் காரணமின்றி சுற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. இவ்வாறு சுற்றுபவர்களினால்  மட்டும் எத்தனை பேருக்கு கொரோனா பரவியிருக்கும் என்பதை யாராலும் யூகிக்கவே முடியாது.

கொரோனா சங்கிலி

கொரோனாவை தடுக்க தமிழக அரசு கடும் முயற்சிகள் முன்னெடுத்து வருகிறது. அரசின் முயற்சி மட்டும் போதாது,  ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே தினசரி பாதிப்பை குறைக்க முடியும். அப்போது தான் கொரோனாவின் சங்கிலியை உடைத்து தெரிய முடியும். எனவே தேவயைின்றி வெளியே வராதீங்க, விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி கொரோனா சங்கிலியை வேரறுப்போம்.

Next Story