கிறிஸ்தவ திருச்சபையில் ரூ.5 கோடி கையாடல்; முன்னாள் நிர்வாகி கைது


கிறிஸ்தவ திருச்சபையில் ரூ.5 கோடி கையாடல்; முன்னாள் நிர்வாகி கைது
x
தினத்தந்தி 19 May 2021 5:51 PM GMT (Updated: 2021-05-19T23:21:27+05:30)

விழுப்புரத்தில் கிறிஸ்தவ திருச்சபையில் ரூ.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ்ரூபன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ திருச்சபையில் பொருளாளராக உள்ளார். இந்த திருச்சபைக்கு சொந்தமான வணிக வளாகம் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் 80 செண்ட் அளவில் உள்ளது.
இந்த இடத்தை விற்பனை செய்ய திட்டமிட்டு சென்னை தி.நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் ரூ.13 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு முன்பணமாக நேரடியாக ரூ.1 கோடியே 62 லட்சமும், ரூ.4 கோடியே 98 லட்சத்து 15 ஆயிரத்தை வரைவோலையாகவும் பெற்று அதனை திருச்சபையின் மத்திய கருவூல கணக்கில் வரவு வைக்குமாறு அப்போதைய செயலாளராக இருந்த சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சார்லஸ் என்பவரிடம் திருச்சபை சார்பில் வழங்கப்பட்டது.

ரூ.5 கோடி கையாடல்

ஆனால் இந்த வரைவோலையில் குறிப்பிட்ட தொகையை திருச்சபை கணக்கில் வரவு வைக்காமல் சார்லஸ் மற்றும் அப்போதைய பொருளாளராக இருந்த மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரை அடுத்த கீழமேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஞானராஜ் ஆகியோர் திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் உள்ள ஒரு வங்கியின் மூலம் அந்த திருச்சபை பணத்தை கையாடல் செய்து விட்டனர். இதற்கு வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் இன்பராஜ் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருச்சபையின் தற்போதைய பொருளாளரான ஆண்ட்ரூஸ்ரூபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு கொடுத்தார். இம்மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, அதனை மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

ஒருவர் கைது

அதன்பேரில் சார்லஸ், ஞானராஜ், வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் இன்பராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதோடு 4 பேரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரான சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார், நேற்று திருச்சபையின் முன்னாள் பொருளாளரான ஞானராஜை கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் 3 பேருக்கு வலைவீச்சு

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள சார்லஸ், வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் இன்பராஜ் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story