குமரியில் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,280 ஆக உயர்வு


குமரியில் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,280 ஆக உயர்வு
x
தினத்தந்தி 19 May 2021 5:54 PM GMT (Updated: 19 May 2021 5:54 PM GMT)

குமரி மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,280 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் பலியாகி உள்ளனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,280 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் 17-ந்தேதி கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 881 ஆக இருந்தது.
தொற்று பாதிப்பு குறைந்ததை கண்ட குமரி மாவட்ட மக்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த சந்தோஷம் நீடிப்பதற்குள் நேற்று முன்தினம் மீண்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.
1,280 பேர் பாதிப்பு
அதாவது நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவால் 1,280 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். குமரி மாவட்டத்தை சேர்ந்த 1,273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 1280 பேரில் ஆண்கள் 669 பேரும், பெண்கள் 611 பேரும் அடங்குவர். இதில் 97 சிறுவர்களும் சிகிச்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக நாகர்கோவில் நகரில் 334 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். மேலும் அகஸ்தீஸ்வரம் பகுதியில் 167 பேரும், கிள்ளியூர் பகுதியில் 74 பேரும், குருந்தங்கோடு பகுதியில் 107 பேரும், மேல்புறம் பகுதியில் 104 பேரும், முன்சிறை பகுதியில் 44 பேரும், ராஜாக்கமங்கலம் பகுதியில் 124 பேரும், திருவட்டார் பகுதியில் 83 பேரும், தோவாளை பகுதியில் 125 பேரும், தக்கலை பகுதியில் 111 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
37,120 ஆக உயர்வு
இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் நேற்றுமுன்தினம் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 650 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story