கரூரில் அதிக விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காமல் வாழை விவசாயிகள் தவிப்பு


கரூரில் அதிக விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காமல் வாழை விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 19 May 2021 6:22 PM GMT (Updated: 2021-05-19T23:52:48+05:30)

கரூரில் அதிக விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காமல் வாழை விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்
வரத்து குறைவு
கரூர் ரெயில் நிலையம் அருகே வாழை மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லாலாபேட்டை, மாயனூர், கிருஷ்ணராயபுரம், வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனூர், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் புவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழைத்தார்கள் மற்றும் ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் வேலூர், தேனி, போடி ஆகிய பகுதிகளில் இருந்து செவ்வாழைப்பழங்கள், மோரிஸ் பழவகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இதனை கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலம் எடுத்து வாங்கி செல்கின்றனர். இவ்வாறாக கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழை மண்டியில் தற்போது கொரோனா தொற்றால் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் வரத்து குறைந்துள்ளது.
விற்பனை குறைவு
இது குறித்து வாழை மண்டி வியாபாரிகள் கூறுகைள், தற்போது விளைச்சல் அதிகம் இருந்தாலும் கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாதது, கோவில் திருவிழாக்கள் நடைபெறாதது, டீக்கடைகள் அடைப்பு, சந்தைகள் இயங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்  வாழைத்தார்கள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தற்போது பூவன்  வாழைத் தார் ஒன்று ரூ.100 முதல் ரூ.150 வரையும், ரஸ்தாளி ரூ.200 முதல் ரூ.250 வரையும், செவ்வாழை ரூ.500 முதல் ரூ.600 வரையும்,  கற்பூரவல்லி ரூ.200 முதல் ரூ.250 வரையும், பச்சநல்லை ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
கோரிக்கை
இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், விளைச்சல் அதிகம் இருந்தாலும் 20 சதவீத வியாபாரம் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் எந்த லாபமும் கிடைப்பதில்லை என்றனர். எனவே உடனடியாக தமிழக அரசு வாழைகளுக்கு உரிய லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழை விவசாயிகள், மண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story