வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்; தொற்று பரவும் அபாயம்

வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெண்ணந்தூர்:
தினசரி மார்க்கெட்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் வெண்ணந்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே செயல்படும் தினசரி மார்க்கெட்டுக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை வாங்கி செல்கிறார்கள். கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு இந்த தினசரி சந்தை பாவடி பகுதிக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் நேற்று சந்தையில் பொருட்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர். காலை 10 மணி வரை மட்டுமே சந்தை செயல்படும் என்பதால் அவர்கள் பொருட்கள் வாங்க முண்டியடித்தனர். அதில் பெரும்பாலானோர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இடமாற்றம் செய்ய வேண்டும்
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-
வெண்ணந்தூர் தினசரி சந்தையில், பேரூராட்சி பொதுமக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி செல்கிறார்கள். தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சந்தையின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் சந்தையில் அலைமோதி வருகின்றனர்.
சமூக இடைவெளி என்பது இங்கு காற்றில் பறக்கவிடப்படுவதால் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டை போல் இப்போதும், தினசரி சந்தையை வெள்ளை பிள்ளையார் கோவில் பள்ளி வளாகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் தொற்று பரவலை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story