குழந்தையை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் மின்சாரம் தாக்கி பலி


குழந்தையை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 19 May 2021 9:28 PM GMT (Updated: 2021-05-20T02:58:12+05:30)

விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையின் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் மின்சாரம் தாக்கி பலியானார்.

பேராவூரணி;
விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையின் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் மின்சாரம் தாக்கி பலியானார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
என்ஜினீயர்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராசேந்திரன். விவசாயியான இவரது மகன் கதிர்வேல்(வயது 32). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கொரோனா முழு அடைப்பு காரணமாக இவர் சென்னையில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். தற்போது தனது வீட்டில் இருந்து நிறுவன பணிகளை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், 2 வயதில் அன்புச்செல்வன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. 
குழந்தையின் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது
இவரது வீட்டின் அருகில் உயர்அழுத்த மின்கம்பி செல்கிறது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் கதிர்வேலின் குழந்தை அன்புச்செல்வன் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தான்.
அப்போது உயர் அழுத்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக திடீரென அறுந்து அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை அன்புச்செல்வன் மீது விழுந்தது. 
மின்சாரம் தாக்கி பலி
அதைப்பார்த்த கதிர்வேல் உடனடியாக ஓடிச்சென்று தனது குழந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது கதிர்வேல் மீது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தை அன்புச்செல்வன் தீக்காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். 
போலீசார் விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் வந்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். 
அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆறுதல்
 இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி எம்.எல்.ஏ. அசோக்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "உயர் அழுத்த மின்கம்பிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. அது பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த வாரமும் இதே பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. 
இது தொடர்பாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக மின்கம்பிகளை மாற்றித் தர கேட்டுக் கொண்டுள்ளேன். இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண நிதி பெற்றுத்தரப்படும்" என்றார். 
மகனை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story