கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ‘இறுதி சடங்குகளில் பொதுமக்கள் கூடுவதே கொரோனா தொற்று பரவலுக்கு காரணம்’ அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தில் கருத்து


கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ‘இறுதி சடங்குகளில் பொதுமக்கள் கூடுவதே கொரோனா தொற்று பரவலுக்கு காரணம்’ அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தில் கருத்து
x
தினத்தந்தி 20 May 2021 5:58 AM GMT (Updated: 20 May 2021 5:58 AM GMT)

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் இறுதி சடங்கு நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக கும்மிடிப்பூண்டி தாலுகாவில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 மற்றும் 60 என இரட்டை இலக்கத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சைக்கான மையங்களும் நிரம்பியவாறு உள்ளது. இந்த மையங்களில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டு 10 நபர்கள் வெளியே சென்றால் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது. அதே சமயதில் இறப்பு விகிதமும் கூடி வருகிறது.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அதற்கான காரணங்களை கண்டறிய நேற்று கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிகாரிகள் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தாசில்தார் மகேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், பொறியாளர் நரசிம்மன் ஆகியோர்கள் மட்டுமன்றி பல்வேறு தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்களும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தின் போது, கிராமங்களில் பெரும்பாலும் இறுதி சடங்குகளில் தொடர்ந்து அதிக அளவில் கூட்டம் கூடுவதும் கொரோனா தொற்று பரவலுக்கான முதன்மை காரணம் என்பது கண்டறியப்பட்டது. அதன்படி இறுதி சடங்குகளில் விதிமீறல் காணப்பட்டால் போலீஸ் கண்காணிப்புடன் விதி மீறல் இல்லாமல் இறுதி சடங்கு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர அனைத்து ஊராட்சிகளை சார்ந்த கிராமங்களிலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுப்பது, யாருக்காவது தொற்றுக்கான முதற்கட்ட அறிகுறி இருக்கும் போதே உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு முடிவுகள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் விதி மீறல்கள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறைக்கான அலைபேசி எண் 7339667070 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அலைபேசியில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து எந்தவித தகவல் தெரிவிக்கப்பட்டாலும் அதன் ரகசியம் காக்கப்படும் என கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story