உழவர்சந்தைக்கு வெளியே அமைக்கப்பட்ட கடைகள் அகற்றம்


உழவர்சந்தைக்கு வெளியே அமைக்கப்பட்ட கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 20 May 2021 11:20 AM GMT (Updated: 20 May 2021 11:40 AM GMT)

கம்பத்தில், அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்ததால் உழவர்சந்தைக்கு வெளியே அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

கம்பம்:
கம்பத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து காந்திஜி பூங்கா சாலையில் இருந்த உழவர்சந்தை மூடப்பட்டு தற்காலிகமாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையம், வாழைக்காய் ஏற்றுமதி நிறுவனத்திற்கு கன்டெய்னர்கள் மற்றும் லாரிகள் வந்து செல்வதால் அங்கு காய்கறி கடைகள் அமைத்தவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் சில வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெளியே சாலையோரத்தில் கடை அமைத்து வந்தனர். மேலும் இவ்வாறு வெளியில் கடை அமைத்தவர்கள் உழவர்சந்தை விலைப்பட்டியலை மறைத்து அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்தனர். மேலும் இந்த கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது.
இது தொடர்பாக உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கண்ணதாசனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உழவர்சந்தைக்கு வெளியில் அமைக்கபட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வடக்கு பக்கம் முட்புதர்களுடன் இருந்த இடம் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்து அப்பகுதியில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டன. மேலும் உழவர் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் கூடுதலாக காய்கறிகளை விற்பனை செய்தால் கடையின் அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர் சந்தை நிர்வாக அலுவலர் எச்சரித்து உள்ளார்.

Next Story