வாடகை பாக்கி தராமல் செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களை அடித்து உதைத்த தே.மு.தி.க. பிரமுகர் கைது


வாடகை பாக்கி தராமல் செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களை அடித்து உதைத்த தே.மு.தி.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 20 May 2021 12:03 PM GMT (Updated: 2021-05-20T17:33:49+05:30)

வாடகை பாக்கி தராமல் செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களை அடித்து உதைத்த தே.மு.தி.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார் சாகு (வயது 32). இவர் தனது சகோதரர் பிரதாப் சாகு என்பவருடன் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் தங்கி தனியார் நிறுவனங்களுக்கு வடமாநில வாலிபர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனம் நடத்தி வந்தார்.

அங்கு பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை காஞ்சீபுரம் மாவட்ட தே.மு.தி.க. கேப்டன் மன்ற செயலாளர் சுரேஷ்ராஜ் (40) தன்னுடைய வீட்டில் வாடகைக்கு தங்க வைத்திருந்ததாக தெரிகிறது. வடமாநில தொழிலாளர்கள் கடந்த 3 மாத வாடகையாக ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் தர வேண்டி இருந்ததாகவும் தெரிகிறது.

அடி-உதை

கொரோனா ஊரடங்கு காரணமாக வடமாநில வாலிபர்கள் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதை அறிந்த சுரேஷ் ராஜ் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு சென்று வாடகை பாக்கி கேட்டு வடமாநில வாலிபர்களை பிளாஸ்டிக் குழாயால் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

வடமாநில தொழிலாளர்களை முட்டிப்போட வைத்து அடித்து உதைப்பதும், வலி தாங்க முடியாமல் அவர்கள் வலியால் துடித்து காலில் விழும்போதும் விடாமல் அடித்து உதைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோனி சகாய பாரத் ஆகியோர் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் சுரேஷ்ராஜை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வடமாநில தொழிலாளர்களை சரமாரியாக அடித்து உதைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாடகை பாக்கி தராமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வட மாநில தொழிலாளர்களை தே.மு.தி.க. பிரமுகர் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story