விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யாமல் நிலத்தில் விடப்பட்ட முட்டைகோஸ்


விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யாமல் நிலத்தில் விடப்பட்ட முட்டைகோஸ்
x
தினத்தந்தி 20 May 2021 1:51 PM GMT (Updated: 2021-05-20T19:23:49+05:30)

விலை வீழ்ச்சி காரணமாக ஊட்டி, கோத்தகிரியில் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளன.

ஊட்டி,

விலை வீழ்ச்சி காரணமாக ஊட்டி, கோத்தகிரியில் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளன.

விற்பனை செய்ய முடியவில்லை

மலை மாவட்டமான நீலகிரியில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, கர்நாடகா மற்றும் திருச்சி, மதுரை, சென்னை, கோவை போன்ற வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. 

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு உத்தரவால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி மண்டிகள் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை அறுவடை செய்து சரக்கு வாகனங்களில் மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

நேர கட்டுப்பாடு காரணமாக சிறு, குறு விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை உரிய நேரத்துக்கு விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் சரக்கு வாகனங்கள் சொந்தமாக வைத்து இருப்பவர்கள் நீலகிரி மட்டுமில்லாமல் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

 சிறு விவசாயிகள் வாடகைக்கு சரக்கு வாகனங்களை எடுத்து காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல அதிக செலவாகிறது. மேலும் வாகனங்களில் மூட்டைகளை இறக்கி வைக்க தொழிலாளர்களை ஏற்றி செல்ல முடியாத நிலை உள்ளது.

விலை வீழ்ச்சி

இந்த நிலையில் முட்டைக்கோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனால் ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியும் முட்டைகோஸ் அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கிடைத்தது. தற்போது ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.5 மட்டுமே விலை போகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சிறு, குறு விவசாயிகள் காய்கறிகளை வாகனங்களில் ஏற்றி செல்லும் போது போலீசார் தடையில்லாமல் சென்று வர அனுமதிக்க வேண்டும். முழு ஊரடங்கால் அறுவடை செய்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். நேரடியாக நிலத்துக்கு வந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டைகோஸ் விலை வீழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றனர்.

Next Story