நீலகிரியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தள்ளிவைப்பு

நீலகிரியில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரியில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நீலகிரியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. மேலும் 10 தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், நீலகிரியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அரசு வழிகாட்டுதல்கள் வரவில்லை.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து சில மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இருப்பு இல்லை
இதற்கிடையே ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு, கோவக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் இருப்பு இல்லை.
இதனால் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி செலுத்த வருபவர்களை செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர். தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஊசிபோடும் மையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, நீலகிரியில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அரசு தெரிவித்தவுடன் தொடங்கப்படும்.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story