2 பட்டாசு ஆலைகளுக்கு சீல்


2 பட்டாசு ஆலைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 20 May 2021 4:21 PM GMT (Updated: 20 May 2021 4:21 PM GMT)

சிவகாசியில் ஊரடங்கை மீறி இயங்கிய 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

சிவகாசி,மே.
சிவகாசியில் ஊரடங்கை மீறி இயங்கிய 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பட்டாசு ஆலைகள்
முழு ஊரடங்கையொட்டி பட்டாசு ஆலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டு வந்த 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இந்த நிலையில் சிலர் வீடு, வயல்வெளி, கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடம் என மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசுகளை தயாரித்து வந்தனர். இது குறித்து கடந்த 19-ந்தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழு வினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் உள்ள தேன் காலனி, போடு ரெட்டியப்பட்டி ஆகிய இடங்களில் இயங்கி வந்த 2 பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி பட்டாசு உற்பத்தி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த 2 பட்டாசு ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
கடும் நடவடிக்கை
இது குறித்து சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில், அரசின் உத்தரவை மீறி பட்டாசு ஆலைகளை இயக்குவது பெரும் குற்றம். இனி இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் ஆலை நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

Next Story