இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும் அமைச்சர் ரகுபதி பேட்டி


இந்து சமய அறநிலையத்துறையின் மூலம்  அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும்  அமைச்சர் ரகுபதி பேட்டி
x
தினத்தந்தி 20 May 2021 5:29 PM GMT (Updated: 2021-05-20T22:59:46+05:30)

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

அன்னவாசல்:
மருத்துவமனைகளில் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள அன்னவாசல், இலுப்பூர், விராலிமலையில் உள்ள அரசு மருத்துவமனைகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
தரமான சிகிச்சைகள் 
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அன்னவாசல், இலுப்பூர் மற்றும் விராலிமலை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைப்பிரிவுகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அரசு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சைகள் கிடைப்பதும் உறுதி செய்யப்படும். 
3 வேலையும் உணவு 
மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு 3 வேலையும் உணவு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலுப்பூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 45 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்பொழுது 7 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதுடன், இவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
விராலிமலை 
விராலிலை அரசு மருத்துவமனையினை பொருத்தவரையில் 30 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளது. இங்கு 3 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். கூடுதலாக மருத்துவர்கள் உடனடியாக இன்றையதினம் பணியமர்த்தப்படுகின்றனர். இதன்மூலம் இப்பகுதியில் உள்ள 30 கொரோனா நோயாளிகள் இங்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற முடியும். இதனால் அருகில் உள்ள மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பொன்னமராவதி 
பொன்னமராவதி வலையப்பட்டி அரசு தாலுகா மருத்துவமனையில் ரகுபதி ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா வார்டு படுக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு மற்றும் ஆக்சிஜன் இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

Next Story