மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி புதிதாக 442 பேருக்கு தொற்று உறுதி


மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி புதிதாக 442 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 20 May 2021 5:43 PM GMT (Updated: 20 May 2021 5:43 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். புதிதாக 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுக்கோட்டை:
முதியவர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. மாவட்டத்தில் நேற்று மிக அதிகமாக புதிதாக 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 729 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது.  
 கொரோனாவில் தற்போது 2,671 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதுக்கோட்டையை சேர்ந்த 73 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 பேர் உயர்ந்துள்ளது.
கோட்டைப்பட்டினம்
மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டை கிராமத்தில் சுமார் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அப்பகுதியில் உள்ள 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருமயத்தில் 9 பேருக்கு கொரோனா 
திருமயம் ஊராட்சி உள்பட்ட சந்தப்பேட்டை, மகமாயி புரம், மணவாளன்கரை, கோட்டை, அகில்கரை பகுதிகளில் சிலருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் சில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மேலும் மணவாளன்கரை பகுதியில் 2 பேருக்கும், சந்தப்பேட்டை பகுதியில் 6 பேருக்கு ம், சத்தியமூர்த்தி நகரில் ஒருவருக்கும் மொத்தம் 9 பேருக்கு வைரஸ் தோற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து பகுதியிலும் ஊராட்சி சார்பில், துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி, பளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வீடுகள் தோறும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கிருமி நாசினி தெளிப்பு 
கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமையில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமி நாசினி அடிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் கந்தர்வகோட்டை கடை வீதிகள் மற்றும் குமரன் காலனி, இந்திரா நகர் உள்ளிட்ட பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய தலைவர் கார்த்திக் மழவராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளில் தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகர், கமலம் நகர், வலையப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
அரிமளம்
இரும்பாநாடு கிராமத்தை சேர்ந்த 56 பெண், அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 21 வயது பெண், கடியாபட்டி ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்த 29 வயது ஆண், மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்த 36 வயது ஆண் உள்பட 15 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் ஒரு சிலர் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

Next Story