தென்காசியில் கொரோனா கட்டுப்பாடு பகுதிகளாக 27 இடங்கள் அறிவிப்பு

தென்காசியில் கொரோனா கட்டுப்பாடு பகுதிகளாக 27 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தென்காசி, மே:
தென்காசி நகரில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக 27 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 317 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பரிசோதனை
கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. காய்ச்சல், காரணமில்லாத உடல் வலி, தொடர்ந்து தும்மல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி தினமும் பலர் பரிசோதனை செய்து கொள்கிறார்கள். தென்காசி மாவட்டத்திலும் இந்த பரிசோதனை அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் பரிசோதனை கூடங்களில் நடத்தப்படுகிறது.
அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தென்காசி நகரில் இதுபோன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் 317 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள். இதுதவிர தனியார் கல்லூரிகளிலும் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
27 கட்டுப்பாடு பகுதிகள்
தென்காசியில் இதுபோன்று பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 3 பேருக்கு மேல் நோய்தொற்று இருக்கும் தெருக்கள் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜான் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் மேற்பார்வையில் 27 இடங்கள் இதுபோன்று அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தப் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்ல முடியாத அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட கலெக்டர் சமீரன் ஏற்பாடு செய்தபடி நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கொரோனா சிறப்பு மையத்தின் மூலம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை இந்த மையத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு மேலும் நோய்தொற்று ஏற்படாத அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Related Tags :
Next Story