அதிகரிக்கும் கொரோனாவை கண்டுகொள்ளாத வணிகர்கள், பொதுமக்கள்


அதிகரிக்கும் கொரோனாவை கண்டுகொள்ளாத வணிகர்கள், பொதுமக்கள்
x
தினத்தந்தி 20 May 2021 8:25 PM GMT (Updated: 20 May 2021 8:25 PM GMT)

அதிகரிக்கும் கொரோனாவை வணிகர்கள், பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.

அரியலூர்:
அரியலூரில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அதை வணிகர்களும், பொதுமக்களும் கண்டுகொள்வதில்லை.
மருத்துவமனைகளில் இடமில்லை
அரியலூர் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க இடமில்லை. ஸ்கேன் எடுக்கும் மையங்களில் மக்கள் வரிசையில் நிற்கின்றனர். நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் ஊரடங்கு நேரத்தில் அனாவசியமாக சாலையில் சுற்றித்திரியும் நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜவுளி, காலணி, புத்தகம் உள்பட அனைத்து பொருட்கள் விற்கும் கடைகளும் திறக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நகரில் வேறெங்கும் காய்கறி கடைகள் வைக்கக்கூடாது, அவற்றை அரசு மேல்நிலைப்பள்ளி, காமராஜர் திடலில் வைக்க வேண்டும் என்று நகராட்சியின் சார்பில் தினசரி பிரசாரம் செய்து வருகின்றனர்.
காய்கறி கடைகளாக மாறின
ஆனால் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு சில கடைகள் திறக்கப்படுகின்றன. மளிகை, வளையல் கடைகளாக இருந்தவை தற்போது திடீரென காய்கறி கடையாக மாறியுள்ளன. காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ளவர்கள் அரசு உத்தரவை மதிப்பதில்லை. போலீசார் தினமும் அவர்களோடு போராட வேண்டியது உள்ளது. நகர் முழுவதும் நகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். காய்கறி மார்க்கெட்டில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. நகரில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக வணிகர்கள் சார்பில் விழிப்புணர்வு தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

Next Story