தலைவாசல் அருகே ஓடும் காரில் திடீர் தீ- புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிர் தப்பினர்


தலைவாசல் அருகே ஓடும் காரில் திடீர் தீ- புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 20 May 2021 10:35 PM GMT (Updated: 2021-05-21T04:05:39+05:30)

தலைவாசல் அருகே ஓடும் காரில் திடீர் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிர் தப்பினர்.

தலைவாசல்:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் முள்ளங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). தனியார் கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளவரசி (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 நாட்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் தனது நண்பர்கள் வசந்த் (22), தினேஷ் (21) மற்றும் மனைவி இளவரசியுடன் அரவிந்த் மேட்டூருக்கு வந்தார். பின்னர் மேட்டூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி அவர்கள் காரில் சென்றனர். 
தலைவாசல் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடிக்கு வந்த போது, ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த நத்தக்கரை சுங்கச்சாவடி ஊழியர்கள், உடனே காரில் இருந்தவர்களை கீழே இறங்ககூறினார்கள். மேலும் சுங்கச்சாவடியில் வைத்திருந்த தீயணைப்பான் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இதனால் புதுமண தம்பதிகள் மற்றும் அவர்களது நண்பர்கள் என 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story