வழிகாட்டு நெறிமுறைகள் வராததால் சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவில்லை-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

வழிகாட்டு நெறிமுறைகள் வராததால் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்,
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டன.
அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 49 வயது முதல் 59 வரையிலான இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசி போடும் மையங்களில் தினமும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. இந்த நிலையில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆனால் சேலம் மாவட்டத்தில் நேற்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. இதனால் தடுப்பூசி போடும் மையங்களுக்கு இளைஞர்கள் பலர் வந்து ஏமாற்றத்துடன் சென்றனர். கொரோனா தடுப்பூசி பணி தொடங்காதது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக 36 ஆயிரத்து 200 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி அதிகளவு உள்ளன. ஆனால் அரசிடம் இருந்து எங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வராததால் தடுப்பூசி போடவில்லை. அதாவது, இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போடவேண்டுமா? அல்லது மையத்துக்கு வரும் அனைவருக்கும் போட வேண்டுமா? என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை. இன்று (நேற்று) மாலைக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். ஆகையால் நாளை (இன்று) முதல் அந்த பணி தொடங்கப்பட்டு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story