கீழையூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படுமா? வாகன ஓட்டிகள்எதிர்பார்ப்பு


கீழையூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படுமா? வாகன ஓட்டிகள்எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 21 May 2021 11:49 AM GMT (Updated: 21 May 2021 11:49 AM GMT)

கீழையூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் அருகே மேலப்பிடாகையில் இருந்து மீனம்பநல்லூர், களத்திடல்கரை, பாலகுறிச்சி, செம்பியன்மகாதேவி, வடுகச்சேரி, ஆலங்குடி, சிக்கல் வழியாக நாகைக்கு செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த சாலை வழியாக நாகையில் இருந்து மேலப்பிடாகைக்கும், மேலப்பிடாகையில் இருந்து நாகைக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் நாகையில் இருந்து மேலப்பிடாகை வரையில் அரசு பஸ்சும் தினமும் வந்து சென்றது. தற்போது முழு ஊரடங்கு காரணமாக பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் மடப்புரம் ஊராட்சி களத்திடல் கரையில் வெள்ளை ஆற்றங்கரையில் உள்ள பாலம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த 6 மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. சாலை அமைக்க கப்பி கற்கள் போட்ட நிலையில் திடீரென சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பாலகுறிச்சி வழியாக நாகைக்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கப்பி கற்களால் தடுமாறி கிழே விழுந்து காயம் அடைகின்றனர்.

ஆற்றுக்குள் தவறி விழும் அபாயம்

மேலும் மோட்டார் சைக்கிள்கள் பழுதடைகிறது. இந்த சாலை ஆற்றங்கரையில் இருப்பதால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட ஒதுங்கும் போது ஆற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

அதேபோல் களத்திடல்கரை சாலையில் இருந்து பிரிந்து முப்பத்தி கோட்டகம், தெற்குபனையூர், வடக்கு பனையூர், இறையான்குடி வழியாக சாட்டியக்குடி செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த சாலையிலும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்க கப்பிகள் போடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் இந்த வழியாக செல்லும் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்கள் பழுதாகி விடுகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story