தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பை பொறுத்து மையங்கள் குறைப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பை பொறுத்து மையங்கள் குறைப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 23 May 2021 7:52 AM IST (Updated: 23 May 2021 7:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பை பொறுத்து தடுப்பூசி மையங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் கூடுதலாக 136 படுக்கை வசதிகள் கொண்ட ‘ஜீரோ டிலே வார்டை’ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஒருவார காலமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதை பத்திரிகை செய்திகளின் வாயிலாக அறிந்த முதல்-அமைச்சர், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ‘ஜீரோ டிலே வார்டு’ அமைக்க அறிவுறுத்தினார். அதன்படி ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 72 ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்ட படுக்கைகளுடன், தற்போது கூடுதலாக 136 படுக்கைகள் ஜீரோ டிலே வார்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து தற்போது இந்த ஆஸ்பத்திரியில் மொத்தம் 2 ஆயிரத்து 50 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன.

77 லட்சம் தடுப்பூசிகள்

எனவே, இனி சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகள் வாகனங்களில் காத்திருக்க வேண்டியிராது. அதேபோல இங்கு உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை குறித்த தகவலை டிஜிட்டல் பலகையில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவலை தடுக்கும் விதமாக பார்வையாளர்களுக்கு கொரோனா வார்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கூடுதலாக டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நோயாளிகளை கவனித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 77 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. 70 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி மையங்கள் குறைப்பு

தமிழகத்துக்கு 3.5 கோடி தடுப்பூசிகள் பெற சர்வதேச டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசிகள் வந்தபிறகு மேலும் பல புதிய வசதிகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் தொடங்கிவைக்கிறார். தற்போது தடுப்பூசிகள் கையிருப்பை பொறுத்தே தடுப்பூசி மையங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

18 முதல் 44 வயது வரை உடையவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக, இதுவரை 11 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் 400 டன் ஆக்சிஜன் உற்பத்தி ஆகிறது. 470 டன் ஆக்சிஜன் தேவை இருக்கிறது. ரூர்கேலா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும், ரெயில்கள், விமானங்கள், கடல் வழியாகவும் 140 டன் ஆக்சிஜன் வந்து கொண்டிருக்கிறது. அதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜீரோ டிலே வார்டு தொடக்க நிகழ்ச்சியில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஆஸ்பத்திரி டீன் டாக்டர் தேரணிராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கொரோனா சிகிச்சை மையம்

அதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், வார்டு-24, சூரப்பட்டு, வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 84 படுக்கை வசதியுடன் கூடிய சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம், 86 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் மற்றும் 95 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையம் என மொத்தம் 265 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இதையடுத்து மணலி மண்டலம், வார்டு-19-ல் உள்ள நகர்புற சமுதாயநல ஆஸ்பத்திரியில் அமைந்துள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாதவரம் எம்.எல்.ஏ. எஸ்.சுதர்சனம், வடக்கு வட்டார துணை ஆணையாளர் பி.ஆகாஷ், மாதவரம் மண்டல கள ஒருங்கிணைப்பு அலுவலர் டி.மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல் சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 70 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 36-வது கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தையும் மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ. கணபதி தலைமையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

Next Story