இடைத்தரகர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை கண்டித்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்


இடைத்தரகர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை கண்டித்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 23 May 2021 11:21 AM IST (Updated: 23 May 2021 11:21 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. கட்சூர், பெரிஞ்சேரி, பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேலகாபுரம், மாமண்டூர், ஸ்ரீராமாகுப்பம், வெங்கடாபுரம், ஆலப்பாக்கம் உள்பட 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கட்சூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம்.

இதனிடையே ஆந்திராவை சேர்ந்த இடைதரகர்கள் சிலர் நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்தில் விதிமுறைகளை மீறி விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனை கண்டித்து விவசாயிகள் கடந்த 1-ந்தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி விவசாயிகளிடமிருந்து மட்டும் நெல் கொள்முதல் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் இரண்டு நாட்களாக மீண்டும் இடைதரகர்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை அதிகாரிகள் கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது.

இதனால் மற்ற விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் ஐந்தாறு நாட்களாக நெல் கொள்முதல் நிலையம் எதிரே டிராக்டர்களிலேயே வரிசையாக நிற்கின்றன. 2 நாட்கள் முன்பு பெய்த பலத்த மழைக்கு நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் பாழாகி அழுகி விட்டன. இதற்கு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இடைத்தரகர்களுக்கு மீண்டும் முன்னுரிமை வழங்குவதை கண்டித்து தி.மு.க. கச்சூர் கிளை செயலாளர் வெங்கடாத்திரி தலைமையில் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் எதிரே நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story