சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் 4 பேர் கைது


சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 May 2021 9:27 PM IST (Updated: 24 May 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

கதக்கில் சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பெண்ணை போலீசார் தேடிவருகிறார்கள்.

கதக், 

கதக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு சிலர் கொரோனா நோயாளிகளின் உறவினர்களிடம் விற்பனை செய்து வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, ரெம்டெசிவிா் மருந்தை விற்கும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தார்கள். இந்த நிலையில், சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர்கள் பெயர் முகமது இஸ்மாயில், பிரோஜ் கான், கவிசித்தய்யா, ரமேஷ் என்று தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை எடுத்து வந்து சட்டவிரோதமாக 4 பேரும் விற்று வந்துள்ளனர்.


மேலும் தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணியாற்றும் ஜோதியுடன் சேர்ந்து, அங்குள்ள நோயாளி குடும்பத்தினருக்கும் ரெம்டெசிவிர் மருந்தை 4 பேரும் விற்பனை செய்து வந்துள்ளார். அதாவது ஒரு ரெம்டெசிவிர் மருந்தை ரூ.30 ஆயிரத்திற்கு விற்று வந்தது தெரியவந்தது. எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இவ்வாறு அந்த மருந்தை விற்றது தெரியவந்தது.

கைதான 4 பேரிடமும் இருந்து 14 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள், ரூ.2,500 மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் கதக் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள நர்சு ஜோதியை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story