மருந்து விற்பனை பிரதிநிதி வீடுகளில் 15 பவுன் நகை திருட்டு
வத்தலக்குண்டுவில் மருந்து விற்பனை பிரதிநிதி வீடுகளுக்குள் புகுந்து 15 பவுன் நகைளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திண்டுக்கல்:
நகை திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அவருடைய வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர்.
அவர்கள் பீரோவின் பூட்டை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகையை திருடினர்.
சத்தம் கேட்டு எழுந்த துரைப்பாண்டி திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். உடனே அந்த மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பியோடி விட்டனர்.
அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது, துரைப்பாண்டியின் பக்கத்து வீடான மருந்து விற்பனை பிரதிநிதி மீனாட்சிசுந்தரத்தின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து வெளியூருக்கு சென்ற மீனாட்சிசுந்தரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் அங்கு வந்தார். திருட்டு சம்பவங்கள் குறித்து தகவலறிந்த வத்தலக்குண்டு போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் மீனாட்சிசுந்தரத்தின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கு பீரோவின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிவிட்டு, துரைப்பாண்டியின் வீட்டுக்குள் சென்று நகை திருடியது தெரியவந்தது.
சம்பவம் நடந்த இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு வீடுகளில் சோதனை செய்தனர்.
அது திருட்டு நடந்த வீடுகளில் இருந்து ஓடி ஆடுசாபட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் தோட்டம் முன்பு மோப்ப நாய் நின்றது.
அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story