தன்னார்வலர்களை ஊக்கப்படுத்த ‘சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பாளர்’ கைப்பட்டை கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார்

கொரோனா தொற்று தொடர்பான பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்த சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பாளர் என்ற கைப்பட்டையை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்பாக பல்வேறு களப்பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுடன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலரும், வணிக வரித்துறை முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக், துணை கமிஷனர்கள் ஜெ.மேகநாதரெட்டி, விஷூ மகாஜன், வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து களப்பணி, கட்டுப்பாட்டு அறைகளில் பணி மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்குதல் போன்ற பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அதன்படி, 85 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 1,073 தன்னார்வலர்கள் கொரோனா தொற்று தடுப்பு சேவைக்காக பதிவு செய்துள்ளனர். அவர்களின் பணியினை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களை அடையாளப்படுத்தி பணியில் ஈடுபடுத்தவும், எந்தவித தடையும் இல்லாமல் பணிகளை மேற்கொள்ளவும் 'பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பாளர்' என்ற கைப்பட்டை தயார்செய்து கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்திக்குறிப்பில், 'தற்போதைய பேரிடர் காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் தொற்று அல்லது இதர காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை மயானபூமிக்கு கொண்டு செல்வதற்கு மாநகராட்சி சார்பில் 15 அமரர் ஊர்தி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 15 வாகனங்களும் இந்திய செஞ்சிலுவை சங்கத்திடம் மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை 155377 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story